(இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2)
நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.
இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.
நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.
இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.
மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.
மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.
தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.
முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.
ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.
இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.
அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.
முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.தொடரும் இறைவன் நாடினால்...
இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்! படிக்க இங்கே அழுத்தவும்
இஸ்லாம் பற்றிய மேலும் அறிந்துக்கொள்ள: http://egathuvam.blogspot.com/2008/04/blog-post_18.html
Tuesday, April 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment